தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 2, 2010


இலங்கையில் இடம்பெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடுமெனத் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், அதேசமயம் தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு பங்கம் ஏற்படாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம் எனவும் சுட்டிக்காட்டினார்.


இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு அச்சுறுத்தல்கள் அத்துமீறல்களுக்கு மத்தியிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேண்டுகோளின்படி வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அக்கட்சிகள், அடுத்து வரவரவிருக்கின்ற பொதுத் தேர்தலிலும் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றன.


இந்தத் தகவலை கொழும்பில் ரேணுகா ஓட்டலில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்கள். மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் இதனோடு இணைத்துக் கொண்டு எமது ஒற்றுமைப் பலத்தை உறுதிப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.


நாம் எப்போதும் சிங்கள மக்களோடு ஒன்றுபட்டு வாழவே விரும்புகின்றோம். தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் வேறுபட்டு இந்த நாட்டில் வாழக்கூடாது. பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கிருக்கும் உரிமைகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இருக்க வேண்டும்.


இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் சகல சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கியதால் அந்த நாடுகள் இன்று நல்லமுன்னேற்றம் கண்டுள்ளன. அபிவிருத்தியில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறானதொரு வழியை நாமும் பின்பற்றினால் அடுத்த 10 வருடங்களில் எமது நாட்டையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும். இந்தச் செய்தியையே தென்னிலங்கை சிங்கள மக்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்" என்றார் திரு சம்பந்தன்.


"இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை நிராகரித்து வாக்களித்திருக்கின்ற போதிலும், அரசாங்கத்துடன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து பேச்சுக்களை நடத்துவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக" சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்பும் தமது கட்சிக்காரர்கள் மீது வன்முறைகள் தொடர்வதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் அரசுக்கு எதிராக வாக்களித்தமைக்காக திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பதில் பாஸ் நடைமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்