உள்ளடக்கத்துக்குச் செல்

தற்கொலைத் தாக்குதலில் சோமாலிய அமைச்சர் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 11, 2011

சோமாலியாவின் உள்துறை அமைச்சர் ஆப்தி அசன் நேற்று வெள்ளிக்கிழமை அன்று தலைநகர் மொகதிசுவில் அவரது வீட்டில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.


சோமாலியா வரைப்படத்தில் தலைநகர் மொகதிசு

தாக்குதல் நடத்தியவர் அமைச்சரின் மருமகள் என்றும் அல்-சபாப் போரளிக் குழுவின் உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இப்பெண் அடிக்கடி அமைச்சர் வீட்டுக்கு வந்து போனவர் என்றும் அவர் மீது பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். குண்டுத்தாக்குதல் நடத்தியவர் அதே இடத்திலேயே இறந்தார், அமைச்சர் படுகாயமுற்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


சோமாலியாவின் தலைநகரில் கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இது மூன்றாவதாகும்.


தற்கொலைக் குண்டைத் தவிர இரண்டாவது குண்டு அமைச்சரின் படுக்கை அறையில், கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை அதிகாரி நூர் பாரா ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார். இந்த இரண்டாவது குண்டினாலேயே வீட்டுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது."


இத்தாக்குதல் நடைபெற்ற வேளையில், தலைநகர் மொகதிசுவிலும் வேறும் பல சோமாலிய நகரங்களிலும் இரண்டு நாள் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நாடாளுமன்றத்தினதும், அரசுத்தலைவரினதும் பதவிக்காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.


மூலம்[தொகு]