உள்ளடக்கத்துக்குச் செல்

தலிபான் உடல்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிப்பு காணொளியால் சர்ச்சை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 14, 2012

ஆப்கானித்தானில் உயிரிழந்த தலிபான் இயக்க உறுப்பினர்கள் மீது அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து இசுலாமிய நாடுகளில் பெரும் கொந்தளிப்பு கிளம்பியுள்ளது. இந்தக் காணொளியில் காட்டப்பட்ட நான்கு அமெரிக்கக் கடற்படையினரும் அமெரிக்க இராணுவப் புலனாய்வுத்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இக் காணொளி வெளியானதையடுத்து குறித்த வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமென அமெரிக்கக் கடற்படைகளின் தலைமையகம் அறிவித்திருந்தது.


தற்போது யூடியூபில் வெளியாகியுள்ள இக்காணொளியில் மூன்று தீவிரவாதிகளின் உடல்கள் கீழே கிடக்க அவற்றைச் சுற்றி நிற்கும் நான்கு அமெரிக்க வீரர்கள், சிரித்தபடியும், பேசியபடியும் அவ்வுடல்களின் மீது சிறுநீர் கழிக்கின்றனர். இந்த வீடியோ குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க இசுலாமிய நல்லுறவுப் பேரவை போர் விதிமுறைகளை மீறும் வகையில் அமெரிக்க வீரர்கள் செயல்பட்டிருப்பது அநாகரிகமாக கண்டிக்கத்தக்க வகையில் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.


இதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி மற்றும் கடற்படை செய்தி தொடர்பாளர் ஸ்டீவர்ட் அப்டன் கூறுகையில், இது மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்தக் காட்சியை யார் வீடியோ எடுத்தது, யார் இணையதளத்தில் வெளியிட்டது என்பது தெரியவில்லை. போர் விதிமுறைகளில் மிகவும் கண்ணியம், நேர்மையை பின்பற்றும் நாடு அமெரிக்கா. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


சம்பந்தப்பட்ட நால்வரில் இருவர் அமெரிக்க கடற்படை புலனாய்வாளர்களால் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக எவ்வாறான தண்டனைகள் அளிக்க முடியும் எனத் தீர்மானிப்பதற்கு லெப். ஜெனரல் தாமசு வால்தாசர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த கடற்படையினர் ஆப்கானித்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சேவை புரிந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.


ஆப்கானித்தானைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பையும் 2014ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டுநாட்டை விட்டு வெளியேற நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன இந்நிலையில் அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் பல்வேறு விதி மீறல்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


மூலம்

[தொகு]