தாய்லாந்தின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 20, 2010

அரசுக்கு எதிராகப் பல நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட “செஞ்சட்டை அணியினரின்” தலைவர்கள் சரணடைந்ததைத் தொடர்ந்து, தலைநகர் பாங்கொக் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை தாய்லாந்து அரசு அமுல் படுத்தியுள்ளது.


காயமடைந்த ஆர்ப்பாட்டக் காரர் ஒருவர்
ஆர்ப்பாட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட ஒரு வாகனம்

முன்னதாக தாய்லாந்தில் அரசுக் கெதிரான ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட செஞ்சட்டை அணியினர் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு விட்டு பொது மைதானத்தில் ஒன்று கூடுமாறு செஞ்சட்டை அணியின் முக்கிய தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.


இதனால் நீண்ட நாள் முற்றுகையைக் கைவிட்ட செஞ்சட்டை அணியினர் மைதானத்தில் ஒன்று கூடினர். அரசு பாரிய தாக்குதலுக்குத் தயாரானதால் தாங்கள் மக்களின் உயிர் களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டதாக செஞ்சட்டையணியினர் தெரிவித்தனர்.


அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ நகர்வுகள் வெற்றியளித்ததாக தாய்லாந்து அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது.


ஆர்ப்பாட்ட அணியின் ஆறு தலைவர்கள கைது செய்யப்பட்டனர். நேற்றைய வன்முறையின் போது குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். சென்ர வாரம் இராணுவ நடவடிக்கை ஆரம்பமான பின்னர் மொத்தம் 40 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.


பாங்கொக்கின் பல கட்டடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர். தென்கிழக்காசியாவின் இரண்டாவது பெரிய பல்பொருள் அங்காடி தீக்கிரையாக்கப்பட்டது. அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும் சனல் 3 தொலைக்காட்சி நிலையம், மற்றும் இரண்டு ஆங்கிலேயக் கம்பனிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.


இராணுவ நடவடிக்கை தாய்லாந்தில் ஒரு திறந்த போரைக் கொண்டுவர வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் தக்சின் செனவாத்திரா தெரிவித்தார்.

மூலம்[தொகு]