தார்பூரின் முக்கிய போராளிக்குழு சூடான் அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 21, 2010


தார்ஃபூரின் முக்கிய போராளிக் குழு ஒன்று சூடான் அரசுடன் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.


சூடானில் தார்ஃபூர்

ஜெம் என்ற "நீதியும் சமத்துவத்துக்குமான இயக்கம்" (Justice and Equality Movement - Jem) மேலும் பேச்சுக்களுக்கு கால அட்டவணை விதித்துள்ளதுடன், அவர்களின் 100 போராளிகளுக்கான மரணதண்டனைகளை இரத்துச் செய்யவும் கேட்டுள்ளது.


தார்ஃபூரின் அமைதிக்கு இவ்வுடன்படிக்கை ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இருப்பினும் மற்றைய முக்கிய குழு பேச்சுக்களுக்கு வர மறுத்துள்ளது.


அரசுப் படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையில் கடந்த 7 ஆண்டுகாலமாக இடம்பெற்றுவரும் போரின் உச்சம் அண்மைக்காலமாகக் குறைந்திருந்தது.


300,000 பேர் இதுவரையில் இறந்திருப்பதாக ஐநா மதிப்பிட்டிருக்கிறது. 2.5 மில்லியன் மக்கள் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர்.


சாடின் தலைநகர் ந்ஜாமினாவில் நேற்று சனிக்கிழமை அன்று போர்நிறுத்தம் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் இரு தரப்பிற்கும் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனனலும் இது ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் அல்ல என ஜெம்மின் பேச்சாளர் தெரிவித்தார்.


அதிகாரப் பகிர்வு, இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவது போன்ற விடயங்களுக்கு இவ்வாரத்தில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெம் கைதிகளின் மரணதண்டனைகளை இரத்துச் செய்வதாக சூடான் அரசுத்தலைவர் பஷீர் தெரிவித்தார். இவர்களுள் 30 விழுக்காட்டினர் உடனடியாக விடுதலை செய்யப்படுவர்.


இவ்வுடன்பாடு முறைப்படி கத்தாரின் தலைநகர் டோஹாவில் முறைப்படி கையெழுத்திடப்படும் என போராளிக்குழுவின் பேச்சாளர் அகமது உசைன் தெரிவித்தார்.

மூலம்