உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 1, 2011

மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் (ஜான் பால் II) வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் குழுமியிருந்த நிலையில் இன்று நடைபெற்ற திருப்பலியில் அருளாளர் அல்லது முக்திப்பேறு பட்டம் பெற்றவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


அருளாளராக அறிவிக்கப்பட்ட திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களே அறிவித்த இறைஇரக்க ஞாயிறு பெருவிழாத் திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் (பதினாறாம் ஆசீர்வாதப்பர்) அவரை முக்திப்பேறு பெற்றவராக அறிவித்தார். இவ்விழாவைக் காண உலகெங்கணும் இருந்து ஒரு மில்லியன் மக்கள் வரை வத்திக்கான் நகருக்கு வந்திருந்ததாக ரோம் நகரக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஜான் பால் பிரந்த நாடான போலந்தில் இருந்து பெருந்தொகையான பக்தர்கள் வந்திருந்தனர்.


ரோம் நகர் இவ்வளவு பெருந்தொகையானோரை கடந்த ஆறாண்டு காலமாகக் கானவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். ஆறாண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் ஜான் பால் இறந்த நிகழ்வுக்கு 3 மில்லியன் பேர் சமூகமளித்திருந்தனர்.


இன்றைய முக்திப்பேற்று நிகழ்வில் சிம்பாப்வே அரசுத்தலைவர் ராபர்ட் முகாபே கலந்து கொண்டார். சிம்பாப்வே மீது போக்குவரத்துத் தடை இருந்த போதிலும், ரோமன் கத்தோலிக்கரான இவருக்கு இத்தாலி செல்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது. இவரை விட போலந்து, மெக்சிக்கோ அரசுத் தலைவர்கள் உட்பட 90 நாடுகளில் இருந்து பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.


நாளை திங்கள் காலை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் நன்றித் திருப்பலி நிகழ்த்துவார்.


1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 1929ல் எமிலியா என்ற தனது தாயை இழந்தார். தனது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932ல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941ல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939ல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் கல் குவாரியிலும் பின்னர் சொல்வாய் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946ல் குருவானார். 1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.


1978ம் ஆண்டு அக்டோபர் 16 இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ம் நாள் காலமானார்.


அருளாளர் பட்டம் என்பது இறந்த ஒரு மனிதர் விண்ணகத்தில் இருக்கிறார் எனவும், கடவுளிடம் இவ்வுலகில் இருப்பவர்களுக்காக பரிந்து பேசும் வல்லமை உள்ளவர் எனவும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். முக்திபேறு பட்டம், புனிதர் பட்டம் பெறுவதற்கான நான்கு படிகளில் மூன்றாவது படியாகும்.


அன்னை தெரேசாவுக்கு, திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அக்டோபர் 19, 2003 அன்று அருளாளர் பட்டம் வழங்கினார்.


மூலம்

[தொகு]