உள்ளடக்கத்துக்குச் செல்

தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து ஈரானிய முஜாகதீன் அமைப்பை அமெரிக்கா நீக்கியது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 29, 2012

ஈரானின் மக்கள் முஜாகதீன் அமைப்பைத் தனது தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை அரசுச் செயலர் இலறி கிளிண்டன் விடுத்துள்ளார்.


ஈரானிய மக்களின் முஜாகதீன் (Mujahideen-e Khalq, MEK) என்ற இந்த அமைப்பை 1997 ஆம் ஆண்டில் பயங்கரவாத அமைப்பாகக் கூறி அமெரிக்கா தடை செய்தது.


1970களில் அமெரிக்காவின் ஆதரவில் இயங்கிய ஈரானிய ஷா மன்னரின் ஆட்சியைக் கவிழ்க்க இந்த அமைப்பு ஆயுதமேந்திப் போராடியது. அத்துடன் ஷா மன்னரை அடுத்து பதவிக்கு வந்த இசுலாமிய மதகுருக்களின் ஆட்சிகளையும் அது எதிர்த்து வந்தது. தற்போது இது அனைத்து ஆயுத வன்முறைகளையும் கைவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


கடந்த பத்தாண்டுகளில் இவ்வியக்கம் எவ்விதத் தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடாமை, மற்றும் ஈராக்கில் இருந்த தனது துணை இராணுவத் தளத்தை மூடியமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இவ்வியக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியதாக அமெரிக்க அரசுச் செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இவ்வமைப்பின் கடந்த கால வரலாற்றைத் தாம் மறக்கவில்லை எனவும் அவ்வறிக்கை கூறுகிறது. ஈரானிய முஜாகதீன் அமைப்பின் சொத்துக்கள் மீதான தடைகள் அனைத்தும் நேற்று வெள்ளிக்கிழமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.


இத்தடை நீக்கத்தை இவ்வமைப்பின் தலைவர் மரியாம் ரஜாவி வரவேற்றுள்ளார். ஈரானிய மக்களின் சனநாயகத்துக்கான போராட்டத்துக்கு முக்கிய தடை நீங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈரான்னிய முஜாகதீன் அமைப்புக்கு ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் உசைன் ஈராக்கில் புகலிடம் வழங்கியிருந்தார். ஆனாலும், அவருக்குப் பின்னர் வந்த புதிய சியா அரசு இவர்களை வரவேற்கவில்லை. ஈராக்கின் அகதிகள் முகாம் ஒன்றில் இவ்வியக்க உறுப்பினர்கள் தங்கியிருந்தனர்.


பிரித்தானியா இவ்வியக்கத்தின் மீதிருந்த தடையை 2008 ஆம் ஆண்டில் நீக்கியது, அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் 2009 ஆம் ஆண்டில் தடையை நீக்கியது.


மூலம்[தொகு]