உள்ளடக்கத்துக்குச் செல்

தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோளை சப்பான் ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மே 18, 2012

வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள் ஒன்றை முதற்தடவையாக சப்பான் வணிகரீதியில் விண்ணுக்கு ஏவியுள்ளது.


தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட கொம்ப்சாட்-3 என்ற இந்த செயற்கைக்கோள் எச்-2ஏ என்ற ஏவுகலம் மூலம் தெற்கு சப்பானின் தனிகசீமா தீவில் இருந்து இன்று அதிகாலை 1:39 மணிக்கு ஏவப்பட்டது. இது ஏவப்பட்டு 16 நிமிடங்களில் செயற்கைக்கோள் ஏவுகலத்தில் இருந்து பிரிந்தது. இதனுடன் செலுத்தப்பட்ட மேலும் மூன்று சப்பானிய செயற்கைக்கோள்கள் பின்னர் பிரிந்தன.


இதன் மூலம் விண்கலங்களை ஏவும் வணிக முயற்சியில் ஐரோப்பா, மற்றும் உருசியாவுடன் சப்பானும் தற்போது இணைந்துள்ளது. ஏவுகலத்தை 2007 ஆம் ஆண்டில் இருந்து இயக்கி வரும் மிட்சுபிஷி நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் பல வணிக செயற்கைக்கோள்களை ஏவும் பணியில் ஈடுபடவுள்ளது.


கொரிய விண்வெளி ஆய்வுக் கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கொம்ப்சாட்-3 (KOMPSAT-3) செயற்கைக்கோள் பல்நோக்கு அவதான நிலையமாகச் செயற்படும் என சப்பானிய விண்வெளி ஆய்வு நிலையம் (ஜாக்சா) தெரிவித்துள்ளது. ஜாக்சாவின் எச்-2ஏ ஏவுகலம் 21வது தடவையாக விண்வெளிக்கு ஏவப்படுகிறது.


மூலம்[தொகு]