தெற்கு சூடானின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 23, 2011

தெற்கு சூடானின் முக்கிய போராளித் தலைவர் கேர்னல் கட்லுவாக் காய் என்பவர் இன்று படுகொலை செய்யப்பட்டார். இவர் இவ்வார ஆரம்பத்திலேயே தெற்கு சூடான் அரசுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தார்.


கேர்னல் காய் இன்று சனிக்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் எவ்வாறு இறந்தார் என்பதில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. யுனிட்டி மாநிலத்தில் பக்கூர் மாவட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது.


இம்மாத ஆரம்பத்தில் தெற்கு சூடான் சூடானிடம் இருந்து விடுதலை அடைந்தது. ஆனாலும் அங்கு பல ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன.


கடந்த ஆண்டு தேர்தல்களில் கட்லுவாக் காய் மாநில ஆளுநர் பதவிக்குத் தான் ஆதரித்த வேட்பாளர் சர்ச்சைக்குரிய முறையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அரௌக்கு எதிரான தனது கிளர்ச்சியை ஆரம்பித்தார். கடந்த வாரம் தெற்கு சூடானிய இராணுவத்தினருடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் படி இவர் மீண்டும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படவிருந்தார்.


இவர் இராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டதாக சக போராளி ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். ஆனாலும் இராணுவப் பேச்சாளர் இதனை நிராகரித்துள்ளார். தனது குழுவின் பிரதித் தலைவருடன் முரண்பட்டதாலேயே அவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.


மூலம்[தொகு]