தெற்கு சூடானின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 9, 2011

சூடானின் தெற்குப் பகுதியில் வடக்கில் இருந்து பிரிவதற்காக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகிறது. ஒரு வாரத்துக்கு இடம்பெறும் இவ்வாக்கெடுப்பை அடுத்து நாடு இரண்டாகப் பிளவுபடும் எனப் பரவலாக நம்பப்படுகிறது.


தெற்கு சூடான் (சிவப்பு)

தெற்கு சூடானின் தலைவர் சல்வா கீயிர் கருத்துத் தெரிவிக்கையில், "பல்லாண்டு காலமாக தெற்கு சூடான் மக்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளுக்காகக் காத்திருந்தனர்," என்றார்.


இருபதாண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உடன்படிக்கை ஒன்றை அடுத்து இந்த வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு சூடான் தலைவர்கள், கிறித்தவர்களையும், வேறு பழமைவாத இனங்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கு சூடானின் அமைதி வழியிலான பிரிவுக்கு சம்மதித்தனர்.


ஆனாலும் விடுதலை அடையவிருக்கும் தெற்கு சூடான் நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கும் என சூடானின் அரசுத்தலைவர் ஒமார் அல்-பசீர் எச்சரித்துள்ளார்.


வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரேயே வாக்கெடுப்பு நிலையங்களில் பெருந்தொகையானோர் வாக்களிப்பதற்காகக் கூடியிருந்ததை அவதானித்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். "எனது தாய், தந்தை, சகோதரர்கள் போரில் இறந்து விட்டனர். அவர்களுக்காக நான் இன்று வாக்களிக்கிறேன்," என ஆபிரகாம் பார்னியாங்கு என்பவர் தெரிவித்தார்.


தெற்கு சூடான் உலகின் மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. சூடானின் அரசு தம்மை ஏனைய பிரதேசங்களைப் போலக் கவனிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


2005 உடன்படிக்கையின் படி பொது வாக்கெடுப்பின் போது குறைந்தது 60 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். இல்லையேல் வாக்கெடுப்பு செல்லுபடியற்றதாகி விடும். வாக்கெடுப்பு முடிவுகள் பெப்ரவரி 1 ஆம் நாள் அறிவிக்கப்படும். சூலை 9 ஆம் நாள் விடுதலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். விடுதலையின் பின்னர் தெற்குப் பகுதியில் உள்ள 80 விழுக்காடு எண்ணெய் வளங்கள் தெற்கின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.


ஆத்திரேலியாவில் அகதிகளாக உள்ள தெற்கு சூடானிய மக்களும் இன்று ஆத்திரேலிய நகரங்களில் நடந்த வாக்கெடுப்பில் பெருமளவில் கலந்து கொண்டதாக ஏபிசி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


மூலம்