தெற்கு சூடானில் இனமோதல், பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
- 14 சனவரி 2014: தெற்கு சூடானில் இருந்து வெளியேறியோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 200 பேர் வரை உயிரிழப்பு
- 4 சனவரி 2014: தெற்கு சூடான் பேச்சுவார்த்தைகளில் தடங்கல்
- 22 திசம்பர் 2013: தெற்கு சூடானின் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக அறிவிப்பு
- 17 திசம்பர் 2013: தெற்கு சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதாக அரசு அறிவிப்பு
- 27 ஏப்பிரல் 2013: தெற்கு சூடான்: முக்கிய போராளிக் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்
செவ்வாய், சனவரி 3, 2012
தெற்கு சூடானில் ஜொங்கிலெய் மாநிலத் தலைநகர் பிபோர் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் இனமோதல்களை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
உள்ளூர் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு ஐக்கிய நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளது. 6,000 இற்கும் அதிகமான போராளிகள் தமது எதிராளிகளுடன் போரிடுவதற்காக நகரை நெருங்கி வருவதாக ஐநா எச்சரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் போவு நூவர் இனப் போராளிகள் லுக்கன்கோல் நகரினுள் நுழைந்து அங்குள்ள வீடுகளைத் தீக்கிரையாக்கி, கால்நடைகளை அபகரித்துச் சென்றனர். இதனால் லுக்கன்கோல் நகரமே எரிந்து சாம்பலாகியுள்ளதாக எம்எஸ்எஃப் மருத்துவப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட 20,000 பேர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர்.
நூவர் வெள்ளை இராணுவம் என அழைக்கப்படும் போராளிக் குழு ஒன்று "தமது இனத்தையும், நூவர் கால்நடைகளையும் நீண்ட கால நோக்கில் காப்பாற்றுவதற்கு மூர்லி இனத்தை முற்றாக அழிப்பதே சிறந்தது" என டிசம்பர் 26 இல் ஓர் அறிக்கை விடுத்திருந்தது. 2005 ஆம் ஆண்டில் இருந்து தமது இனத்தையும், தமது கால்நடைகளையும் திட்டமிட்டு அழித்து வருவதாக மூர்லி இனத்தவர் மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிகக் காவல்துறையினரையும், படையினரையும் கலவர இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக தெற்கு சூடானிய அரசு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அன்று பிபோர் நகரில் இருந்து மூர்லி இனத்தவர்கள் நூவர் போராளிகளின் தாக்குதலுக்கஞ்சி பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறினர்.
பிபோர் நகரில் உள்ள தமது பணியாளர்கள் 130 பேருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக எம்எஸ்எஃப் நிறுவனம் அறிவித்துள்ளது. 13 பேருடன் மட்டும் தாம் தொடர்பு கொண்டுள்ளோம் என தெற்கு சூடானில் உள்ள எம்எஸ்எஃப் நிறுவனத்தின் தலைவர் பார்த்தசாரதி இராஜேந்திரன் தெரிவித்தார்.
மூலம்
[தொகு]- South Sudanese flee to escape deadly ethnic vendetta, பிபிசி, சனவரி 2, 2012
- UN fears South Sudan 'tragedy', ஏபிசி, சனவரி 2, 2012