தெற்கு சூடானில் இரு இராணுவக் குழுக்களிடையே மோதல், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 5, 2011

தெற்கு சூடானில் சர்ச்சைக்குரிய மலாக்கல் என்ற நகரில் இராணுவத்தினரிடையே இடம்பெற்ற மோதலில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.


வடக்கு சூடானிய இராணுவத்தின் இரண்டு பிரிவுகளுக்கிடையே கடந்த வியாழன் அன்று மோதல் வெடித்தது. இவர்களில் சிலர் தெற்கு சூடானில் தங்கியிருக்க விருப்பம் கொண்டுள்ளனர். இம்மோதல்களில் இடையே இடம்பெற்ற மோர்ட்டார் தாக்குதல்களில் சிக்கிய பொது மக்களே இறந்தவர்களில் பெரும்பாலானோர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பலர் இறந்திருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மலாக்கல் நகரில் முன்னரும் இவ்வாறான மோதல்கள் இருந்து வந்துள்ளன.


தெற்கு சூடான் தனியாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆயினும் 99 வீத மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது.


தெற்கு சூடானிய இராணுவத்தினர் சிலர் வடக்கு சூடானியர்களுடன் இணைந்து அந்நகரை விட்டு அகல மறுப்பதனாலேயே மோதல் இடம்பெற்றதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவிக்கிறார். வடக்கில் தமக்கு எவ்வித உரிமையும் கிடைக்காது என அவர்கள் நம்புகின்றனர். பிரிவினைக்கு ஆதரவான தெற்கு சூடானின் இராணுவத்தினர் இம்மோதலில் பங்கெடுக்கவில்லை.


2011 சூலை 9 ஆம் நாள் தெற்கு சூடான் உலகின் புதிய நாடாக அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் வடக்கு-தெற்கு எல்லையில் நிலவும் இராணுவத்தினரின் பிரச்சினையை புதிய அரசு எதிர்கொள்ள நேரிடும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]