தெற்கு சூடானை அடுத்து சூடானும் புதிய நாணயத்தை அறிமுகம் செய்தது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 25, 2011

சூடான் புதிய நாணயத்தை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளிலும், பணம் மாற்றும் முகவர் நிலையங்களிலும் புதிய தாள்கள் கிடைக்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.


இரண்டு வாரங்களுக்கு முன்னர் சூடானில் இருந்து பிரிந்து சென்ற தெற்கு சூடான் அண்மையில் தனது புதிய நாணயத்தை அறிமுகம் செய்ததை அடுத்தே சூடானும் இம்முடிவை எடுத்துள்ளது. கிட்டத்தட்ட 2 பில்லியன் சூடானிய பவுண்டுகள் தெற்கு சூடானில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பணம் சூடானின் பொருளாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்திலேயே சூடான் இம்முடிவை எடுத்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.


அடுத்த மூன்று மாதத்துக்குள் பழைய தாள்கள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என சூடானிய மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.


"தெற்கில் புழக்கத்தில் உள்ள சூடானியப் பணம் தொடர்பாக இரண்டு தரப்பும் ஒரு சுமுகமான உடன்பாட்டுக்கு வரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி பிரதி ஆளுநர் பத்ர் அல்-டின் மகுமுத் தெரிவித்தார்.


இரு நாடுகள் எண்ணெய் தொடர்பாக உடன்பாட்டுக்கு வர வேண்டி உள்ளது. பெற்றோலியம் முழுவதும் தெற்கு சூடானிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், அவற்றை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான உட்கட்டமைப்புகள் அனைத்தும் சூடானிலேயே உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதற்கு தெற்கு சூடான் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்பதில் இதுவரையில் உடன்பாடு எட்டப்படவில்லை.


மூலம்[தொகு]