உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு சூடான் அகதி முகாம் மீது சூடான் வான் தாக்குதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 11, 2011

தமது எல்லைப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றின் மீது சூடான் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெற்கு சூடான் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இத்தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயமடைந்தனர்.


எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய மாநிலம் எனப்படும் தெற்கு சூடானிய மாநிலத்தில் யீடா முகாம் மீது நேற்று வியாழக்கிழமை இத்தாக்குதல் நடைபெற்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டை சூடானிய இராணுவம் நிராகரித்துள்ளது.


தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில் தமது செய்தியாளர் அங்கு நின்றதாக பிபிசி தெரிவித்துள்ளது. இரண்டு தடவைகள் குண்டுகள் வீழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். குண்டு வீச்சுகள் நடந்த சிறிது நேரத்தில் விமானம் ஒன்று வடக்கை நோக்கிச் சென்றதாக அவர் கூறினார்.


குண்டுகளை வீசுவதற்கு முன்னர் விமானம் முகாமைச் சுற்றிப் பறந்ததாக அகதிகள் தெரிவித்தனர். மொத்தம் ஐந்து குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் நான்கு மட்டுமே வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சூடானின் தெற்கு கொர்டோஃபான் பகுதியில் நிகழும் சண்டையை அடுத்து அங்கிருந்து மக்கள் எல்லையைக் கடந்து வந்து யீடா முகாமில் தங்கியுள்ளனர்.


கடந்த சூலை மாதத்தில் தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.


மூலம்

[தொகு]