தெற்கு சூடான் நாடு விடுதலை பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 9, 2011

தெற்கு சூடான் குடியரசு உலகின் புதிய விடுதலை பெற்ற நாடாக இன்று சனிக்கிழமை உருவாகியுள்ளது. நீண்டகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த 2005 ஆம் ஆண்டு அமைதி உடன்பாட்டை அடுத்து சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது.


சூடானிய அரசுத்தலைவர் ஓமார் அல்-பசீர், ஐநா செயலர் பான் கி மூன் ஆகியோர் தலைநகர் சூபாவில் நடைபெறும் இன்றைய விடுதலை நாள் வைபவங்களில் கலந்து கொள்கின்றனர். தெற்கு சூடானை முதலில் தனிநாடாக அங்கீகரித்த நாடு சூடான் ஆகும். தென் சூடானுக்கான தனது உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை சூடான் அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அது வழங்கியது.


தலைநகர் சூபாவில் இன்று அதிகாலை 12:01 மணிக்கு வைபவங்கள் ஆரம்பமாயின. அப்போது புதிய நாட்டுப் பண் தொலைக்காட்சியில் இசைக்கப்பட்டது.


தெற்கு சூடான் ஐக்கிய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட 193வது நாடாகும். அத்துடன் இது ஆப்பிரிக்காவில் உள்ல 54வது நாடும் ஆகும். 19,745 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தென் சூடானில் 7,500,000 முதல் 9,700,000 வரையான மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சல்வா கீர் மாயார்தீத் டீட் அந்நாட்டின் அரசுத்தலைவராக விளங்குகிறார்.


தெற்கு சூடான் நாடு ஆரம்பத்தில் பிரித்தானியர் மற்றும் எகிப்தியரின் கூட்டுரிமையுடன் கூடிய ஆங்கிலோ-எகிப்திய சூடானின் கீழ் ஆளப்பட்டு வந்தது. பின்னர் 1956 ஆம் ஆண்டில் சூடான் குடியரசின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது. எண்ணெய் வளம் கொண்ட தெற்கு சூடானில் இடம்பெற்ற முதலாவது உள்நாட்டுப் போரை அடுத்து 1972 ஆம் ஆண்டில் இது சூடானின் கீழ் தன்னாட்சியுடன் கூடிய சிறப்புப் பகுதியாக 1983 ஆம் ஆண்டு வரை இருந்தது. பின்னர் 1983 இல் இடம்பெற்ற இரண்டாவது உள்நாட்டுப் போரில் 20 இலட்சத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். 2005 ஆம் ஆண்டில் சூடானிய அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டை அடுத்து, அதே ஆண்டின் பிற்பகுதியில் சூடானின் கீழ் மீண்டும் தன்னாட்சி அமைப்பாக உருவானது. அந்த உடன்படிக்கையின்படியே கடந்த சனவரி மாதம் இடம்பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் 99% வாக்காளர்கள் சூடானில் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


மூலம்[தொகு]