தெற்கு சூடான் வாக்கெடுப்பு: பிரிவினைக்குப் பெரும் ஆதரவு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 22, 2011

தெற்கு சூடானில் சென்ற வாரம் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பின் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 99% வாக்காளர்கள் வடக்கில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தெற்கு சூடான் (சிவப்பு)

அதிகாரபூர்வ முடிவுகள் பெப்ரவரி 14 ஆம் நாள் அறிவிக்கப்படும், ஆனாலும் முடிவுகளில் பெருமளவு மாற்றம் ஏற்படப்போவதில்லை என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தெற்கு சூடான் நகரமான ஜுபா உலகின் புதிய தேசிய தலைநகராக உருவாகுவதற்கான எதிர்பார்ப்புகளுடன் காணப்படுகிறது.


ஆனாலும் இவ்வெற்றி குறித்து அவசரப்பட்டு கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எண்ணெய் வளமிக்க தெற்கு சூடானைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முன்னாள் போராளிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எப்படிப்பட்ட முடிவையும் தாம் ஏற்றுக் கொள்வதாக சூடானின் அரசுத்தலைவர் ஒமர் அல் பஷீர் தெரிவித்துள்ளார்.


முடிவுகள் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இவ்வாண்டு சூலை 9 ஆம் நாள் வட ஆப்பிரிக்காவின் புதிய நாடு தனது விடுதலையை அறிவிக்கும்.


இருபதாண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உடன்படிக்கை ஒன்றை அடுத்து இந்தப் பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. அரபு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு சூடான் தலைவர்கள், கிறித்தவர்களையும், வேறு பழமைவாத இனங்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கு சூடானின் அமைதி வழியிலான பிரிவுக்கு சம்மதித்தனர்.


மூலம்[தொகு]