தெற்கு சூடான் விடுதலைக்கு ஆதரவு, இறுதி முடிவுகள் வெளிவந்தன

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 9, 2011

கடந்த சனவரியில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் தெற்கு சூடான் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 98.83% தெற்கு சூடானியர் ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் நாட்டில் இருந்து பிரிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக சூடானின் அரசுத்தலைவர் ஒமார் அல்-பஷீர் தேர்தல் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அறிவித்திருந்தார். இருபதாண்டு கால உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த 2005 ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் படி இவ்வாக்கெடுப்பு தெற்கு சூடானில் இடம்பெற்றது.


அதிகாரபூர்வ இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது முன்னாள் தெற்கு சூடான் தலைவர் ஜோன் கராங் அவர்களின் கல்லறையின் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கொடிகளை அசைத்தவாறு மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.


"44,888 மக்கள் (1.17%) பிரிவினைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆதரவாக 3,792,518 பேர் வாக்களித்தனர்," என தேர்தல் ஆணையாளர் முகமது இப்ராகிம் கலீல் தெரிவித்தார்.


அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. வாக்கெடுப்பு சுமூகமாக நடந்தேறினால், தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சூடானை விலக்கி வைப்பதாக ஐக்கிய அமெரிக்கா முன்னர் அறிவித்திருந்தது.


சூடானுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணத் தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தெற்கு சூடானியத் தலைவரும், சூடானின் உப-சனாதிபதியுமான சல்வா கீர் தெரிவித்துள்ளார். ”வடக்கையும் தெற்கையும் பல காரணிகள் இணைக்கின்றன,” என அவர் தெரிவித்தார்.


எண்ணெய் வளம் மிக்கதாக இருந்தாலும், தெற்கு சூடான் உலகின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும். 2005 அமைதி ஒப்பந்தத்தின் படி, 2011 சூலை 9 ஆம் நாள் தெற்கு சூடான் விடுதலையை அறிவிக்கும்.


மூலம்[தொகு]