உள்ளடக்கத்துக்குச் செல்

நளினி விடுதலை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 6, 2010


முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்று பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்பெற்றுக் கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ள நளினி விடுதலை கோர முடியாது எனவும் பொது மன்னிப்பு அளிக்க முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2006 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளின் போது சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் தன்னையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அப்போது அது தள்ளுபடியானது.


அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி மாவட்ட கலெக்டர் போன்றவர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதில் அவர்கள் நளினியை விடுவிக்கக் கூடாது என்று அறிக்கை சமர்பித்திருந்தனர்.


இது தொடர்பாக தமிழக அரசு தனது கருத்தை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதில் தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட முடியாது என்றும் மத்திய அரசுதான் முடிவெடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தது.


இதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் இவ்வழக்கில் ராஜிவ்காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால் மத்திய அரசுதான் முடிவெடுக்கவேண்டும். தூக்குதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பெற்றதால் மற்ற கைதிகள் போல் விடுதலை செய்ய முடியாது, மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பதால் முன்கூட்டியே விடுதலை செய்ய கோர இயலாது என்று நீதிபதிகள் எலிபே தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளது.


இதனை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக நளினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]