உள்ளடக்கத்துக்குச் செல்

நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 2, 2010

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சென்ற செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 29 முதல் வெள்ளிக்கிழமை அக்டோபர் 1 வரையான மூன்று நாட்கள் நியூயோர்க் நகரில் கூடி அவ்வரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரி ஒருவரையும் தெரிவு செய்துள்ளதாக அவ்வரசின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.


நாடு கடந்த தமிழீழ அரசு கோரும் தமிழீழத்தின் வரைபடம் (இலங்கையினுள்)

இதனைத் தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன. நாடுகடந்த தமிழீழ அரசுக்கான நாடாளுமன்றத்திற்கான அவைத்தலைவராக கனடாவைச் சேர்ந்த பொன் பால்ராஜன் என்பவரும், பிரதி அவைத்தலைவராக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுகன்யா புத்திரசிகாமணி என்பவரும் தெரிவு செய்யப்பட்டனர். விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரியாக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக மூன்று பிரதிப் பிரதம மந்திரிப் பதவிகளும் வேறு ஏழு அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.


இவ்வமர்வில் ஐக்கிய அமெரிக்க நாட்டு முன்னைநாள் சட்டமா அதிபர் ராம்சி கிளார்க், மலேசிய பினாங்கு மாநில பிரதி முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகள் தீர்வு ஆகியவற்றிற்கான சர்வதேச விற்பன்னரும் அமெரிக்க அரசுத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கான ஆலோசகரும் கொலம்பியா பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கை மையத்தின் வருகைதரும் கல்விமானுமான பேராசிரியர் எல். பிலிப், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் வாசிங்டன் சட்டக்கல்லூரி UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை நிவாரண நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அலி பெய்டவுன் ஆகியோரின் உரைகளுடன் அமர்வு ஆரம்பமாகியது.


இதுவரை எந்தவொரு தனியான நாடோ அல்லது ஐக்கிய நாடுகள் மன்றம் போன்ற அமைப்புக்களோ இந்த நாடாளுமன்றத்தை அங்கீகரிக்கவில்லை. இது ஒரு சட்டவிரோதமான அமைப்பு என்று இலங்கை அரசாங்கம் இதனை முன்னர் அறிவித்திருந்தது.

மூலம்