உள்ளடக்கத்துக்குச் செல்

நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 14, 2011

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் நேற்று திங்கட்கிழமை தாக்கிய 6.0 ரிக்டர் நிலநடுக்கத்தில் கட்டிடமொன்று இடிந்து விழுந்ததுடன் ஒருவர் கொல்லப்பட்டு குறைந்தது 6 பேர் காயமடைந்துள்ளனர்.


கிறைஸ்ட்சேர்ச்

முதலாவது 5.2 அளவு நிலநடுக்கம் கிறைஸ்ட்சேர்ச் நகர நடுப்பகுதியிலிருந்து 9.6 கிமீ தொலைவில் டெய்லர்ஸ் மிஸ்டேக் கடற்கரையில் மையங் கொண்டிருந்தது. 20 நிமிடங்கள் கழித்து 6.0 அளவான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதன் போது பல கட்டடங்கள் நடுங்கியதுடன் ஒரு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. குன்றுப் பகுதியிலிருந்து பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் சேதங்கள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 50,000 பேர் வரையில் நீர், மற்றும் மின்சாரம் இன்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த பெப்ரவரி மாதம் இதே பகுதியில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கிததில் 181 பேர் கொல்லப்பட்டனர். அப்போது அழிவடைந்து மீள நிர்மாணிக்கப்பட்டு திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களில் ஒன்றே நேற்று இடிந்து விழுந்துள்ளது.


இதேவேளையில், அடிக்கடி தற்போது இப்பகுதியில் இடம்பெறும் நிலநடுக்கங்களினால் கிறைஸ்ட்சேர்ச் பிராந்தியத்தின் சில பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு ஏற்றதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


"நேற்றைய நிலநடுக்கத்தை அடுத்து எப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாது என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்," என நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். 10,000 வீடுகள் வரையில் அழிக்கப்படும் என முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.


பெப்ரவரி நிலநடுக்கத்தினால் மீள்கட்டுமானப் பணிகளுக்காக குறைந்தது 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]