நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சப்பானிய அணுமின் நிலையத்தில் வெடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 13, 2011

சப்பானில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் சேதமடைந்திருந்த ஃபுக்குஷீமா அணுமின்நிலையத்தின் அணுஉலையில் நேற்று சனிக்கிழமை காலையில் பெரும் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அணுமின் நிலையத்தின் கட்டிட சுவர்களும் மேற்கூரையும் திடீரென வெடித்துச் சிதறியதில் அதன் பணியாளர்கள் நான்கு பேர் காயமடைந்தனர். வெண்ணிறப் புகை அங்கிருந்து வெளியேறி வருகிறது.


ஃபுக்குஷீமா அணுமின் நிலையம்

அணுமின் நிலையத்துக்குக் கிட்டவாக வசித்து வந்த ஏறத்தாழ 170,000 பேர் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர்ந்தனர். நிலையத்துக்கு சுற்றுவட்டத்தில் கதிரியக்க அளவு அதிகரித்துள்ளது என இந்நிலையத்தை இயக்கும் டெப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசுப் பேச்சாளர் யூக்கியோ எடானோ அணு உலை உருகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.


அணு உலையைக் குளிரப்படுத்துவதற்காக பணியாளர்கள் அதற்குள் கடல் நீரை இறைக்கும் போது இவ்வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கட்டிடத்தின் உலோகக் கூடு மட்டும்தான் தற்போது நின்று கொண்டிருக்கிறது.


வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையின் தாக்கத்தினால் இதுவரை 1600 பேர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லாயிரக்கணகானோர் காணாமல் போயுள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]