நைஜீரியாவின் அரசுத்தலைவர் உமரு யராதுவா காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 6, 2010

நைஜீரியாவின் அரசுத்தலைவர் உமரு யராதுவா நீண்ட சுகவீனத்தின் பின்னர் காலமானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


உமரு யராதுவா

ஏழு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்த அரசு, வியாழக்கிழமை அன்று யராதுவாவின் உடல் இசுலாமிய முறைப்படி அவரது சொந்த இடமான கட்சீனாவில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து பதில் அரசுத்தலைவராகப் பணியாற்றும் உதவி சனாதிபதி குட்லக் ஜொனத்தன் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்பார்.


58 அகவையுடைய யராதுவா 2007 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் பதவிக்கு வந்தார். அவர் பல மறுசீரமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்திருந்தார். எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்ட்டா பகுதியில் குழப்பநிலையைப் போக்க இவர் எடுத்த முயற்சிகள் பலனளித்துள்ளன என அவதானிகள் தெரிவித்தனர்.


மத்திய மாநிலமான ஜோஸ் பகுதியில் முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இடையே இனக்கலவரங்கள் அண்மைக் காலங்களில் இடம்பெற்று வருகின்றன.


நேற்று புதன்கிழமை இரவு 09:00 மணியளவில் அபுஜா என்ற இடத்தில் இவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. யராதுவாவின் இறப்புச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன், அஞ்சலி தெரிவிக்கவென பொதுமக்கள் பலர் அரசுத்தலைவர் மாளிகையில் குழுமத்தொடங்கினர்.


அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா உட்படப் பல நாட்டுத்தலைவர்கள் தமது இரங்கல் செய்திகளைத் தெரிவித்துள்ளனர்.


1951 ஆம் ஆண்டு பிறந்த யராதுவா அரசியலுக்கு வரும் முன்னர் வேதியியல் பேராசியராகப் பணியாற்றினார். இவருக்கு 9 பிள்ளைகள் உள்ளனர். 2007 ஆம் ஆண்டு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பரில் சுகவீனம் காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறச் சென்றார்.


பெப்ரவரியில் நாடு திரும்பிய யராதுவா பதில் தலைவரிடம் இருந்து பொறுப்புகக்ளைப் பாரமெடுக்கவில்லை. பதில் தலைவர் குட்லக் ஜொனத்தன் கடந்த மார்ச் மாதத்தில் அமைச்சரவையைக் கலைத்து விட்டு புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

மூலம்