நைஜீரியாவில் கல்லூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 மாணவர்கள் வரை சுட்டுக் கொல்லப்பட்டனர்
- 2 அக்டோபர் 2016: 123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 12 மே 2014: கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டனர்
- 18 ஏப்பிரல் 2014: நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல்
- 26 பெப்பிரவரி 2014: நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு
ஞாயிறு, செப்டெம்பர் 29, 2013
நைஜீரியாவின் வடகிழக்கே கல்லூரி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
யோப் மாநிலத்தின் குஜ்பா மாகாணத்தில் வேளாண்மைக் கல்லூரி ஒன்றின் விடுதியில் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். பலர் உயிரிழந்தனர், ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். வகுப்பறைகள் பல தீக்கிரையாக்கப்பட்டன.
போக்கோ ஹராம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த கடந்த மே மாதத்தில் அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தன் உத்தரவிட்டிருந்தார். மே 14 ஆம் நாள் வட-கிழக்கில் அவசரகால சட்டத்தை அறிவித்தார். இதனை அடுத்து பெரும்பாலான இசுலாமியத் தீவிரவாதிகள் தமது தளங்களை விட்டு வெளியேறினர். ஆனாலும், அவ்வப்போது அவர்கள் இவ்வாறான திடீர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
போக்கோ ஹராம் தீவிரவாதிகள் நாட்டில் இசுலாமிய ஆட்சியை நிறுவுவதற்கு ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர். பள்ளிகள் மேற்குலகக் கலாச்சாரத்தின் சின்னம் என அறிவித்து அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பல பள்ளிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
போக்கோ ஹராம் இயக்கத்திற்கு அபூபக்கர் சேக்காவு என்பவர் தலைவராக இருக்கிறார். இவர் கடந்த ஆகத்து மாதத்தில் தமது தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டு விட்டதாக இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். ஆனாலும், கடந்த வாரம் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில் அவர் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மூலம்
[தொகு]- Nigeria attack: Students shot dead as they slept, பிபிசி, செப்டம்பர் 29, 2013
- Nigeria College Attacked: 'Up To 50 Killed', ஸ்கை நியூஸ், செப்டம்பர் 29, 2013