பப்புவா நியூ கினியின் பிரதமரின் வீட்டில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 15, 2011

பப்புவா நியூ கினியின் பதில் பிரதமர் சாம் அபாலின் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் இறந்த உடல் ஒன்றைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.


தலைநகர் போர்ட் மோஸ்பியில் உள்ள அபாலின் வீட்டுத் தோட்டத்தில் இருந்து திங்கட்கிழமை இவ்வுடல் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபாலின் வளர்ப்பு மகன் தியோ இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் கண்டெடுக்கப்பட்ட நாளில் இருந்து இவர் தலைமறைவாகியிருந்தார். இவரே இப்பெண்ணுடன் கடைசியாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.


பப்புவா நியூ கினியின் அரசுத்தலைவர் மைக்கல் சொமாரே இதய அறுவை சிகிச்சையை அடுத்து ஓய்வெடுத்துள்ளதை அடுத்து அபால் அரசுக்குத் தலைமை வகித்து வந்தார்.


பெண்ணின் இறப்புக்கு காரனம் எதுவும் கூறப்படவில்லை, ஆனாலும் காவல்துறையினர் கொலை வழக்கைப் பதிந்துள்ளனர். இவ்வழக்கில் தாமும் தமது குடும்பமுமே உடனடிச் சந்தேக நபர்கள் என திரு. அபால் கூறினார். இந்நிகழ்வு ஒரு துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்துக்குரியது ஆகும் என அவர் கூறினார். வழக்கு விசாரணைக்குக் குந்தகம் ஏற்படாதிருக்க பிரதமரும் அவரது குடும்பத்தினரும் தற்போது ஒரு விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.


தனது குடும்பத்தினர் எவரும் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என பிரதமர் அபால் செய்தியாலர்களிடம் தெரிவித்தார்.


75 வயதாகும் அரசுத்தலைவர் சொமாரே கிட்டத்தட்ட 16 ஆண்டுகாலம் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர். 1990களில் தனது நிதி நிலை அறிக்கைகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கவென இவர் திசம்பர் 2010 இல் இவர் பதவியில் இருந்து விலகி தனக்குப் பதிலாக தனது நம்பிக்கைக்குரிய திரு. அபாலை பதில் பிரதமராக்கினார். அபால் முன்னர் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.


மூலம்[தொகு]