உள்ளடக்கத்துக்குச் செல்

பப்புவா நியூ கினியில் படையினர் கலகம், படைத்தளபதி கைது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 26, 2012

பப்புவா நியூ கினியில் சில பாதுகாப்புப் படையினர் அந்நாட்டின் படைத்துரையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், பதவியில் இருந்து முன்னர் அகற்றப்பட்ட பிரதமர் சேர் மைக்கேல் சொமாரே மீண்டும் பிரதமராக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொட்டுக் கொண்டுள்ளனர்.


இன்று வியாழக்கிழமை காலையில் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் சுமார் 20 பேரடங்கிய படையினரின் கலகம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு மாத காலமாக தாமே நாட்டின் பிரதமர் எனக் கூறிக்கொள்ளும் பீட்டர் ஓ’நீல் மற்றும் சேர் மைக்கேல் சொமாரே ஆகியோருக்கு இடையேயான முறுகல் நிலையே இக்கலகத்திற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.


கலகக்காரரினால் கைது செய்யப்பட்ட பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிரான்சிஸ் ஆக்வி விடுவிக்கப்பட்டுள்ளதாக பீட்டர் ஓ’நீல் ஆத்திரேலியாவின் ஏபிசி செய்தியாளருக்கு இன்று தெரிவித்தார்.


கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த இளைப்பாறிய கேர்ணல் யாவுரா சாசா என்பவர் தாமே தற்போது பாதுகாப்புத் தளபதி எனவும் சேர் மைக்கேலின் அரசே தம்மை அப்பதவிக்கு நியமித்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.


"அரசியலமைப்பையும், நீதித்துறையையும் பாதுகாப்பதே தமது முக்கிய நோக்கம்," என அவர் பாதுகாப்புத் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். "இன்னும் ஒரு வாரத்தில் சேர் மைக்கேல் பிரதமராக நியமிக்கப்படா விட்டால் தாம அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்," எனவும் அவர் கூறினார்.


ஆனாலும், அவர் அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தின் பின்னர், கலகம் செய்த 30 பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பிரதமர் பெல்டென் நாமா அறிவித்தார். இவர்களுக்கு படையினரின் பெரும்பாலானோரின் ஆதரவு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


பப்புவா நியூ கினி 1975-ல் ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்றதை அடுத்து சேர் மைக்கேல் சோமாரே அந்நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் பொறுப்பைத் தற்காலிகமாக அவரது நம்பிக்கைக்குரியவரான சாம் அபாலிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாட்டுக்குச் சிகிச்சைக்காகச் சென்றார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தார் அவர் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பீட்டர் ஓ’நீல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓய்வு பெற்றதாகத் தாம் அறிவிக்கவில்லை என சிகிச்சையின் பின்னர் நாட்டுக்குத் திரும்பிய சொமாரே தெரிவித்திருந்தார்.


ஓ’நீலின் தெரிவு சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்தது. ஆனாலும் ஓ’நீல் பதவி விலகச் சம்மதிக்கவில்லை. இன்றைய கலகத்திற்குப் பின்னர் ஓ’நீல் எவ்விதமான அறிக்கையையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம்

[தொகு]