உள்ளடக்கத்துக்குச் செல்

பராக் ஒபாமா மீண்டும் அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 7, 2012

அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா தனது இரண்டாவது தவணைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னியை அவர் தோற்கடித்தார்.


பராக் ஒபாமா

அமெரிக்காவின் முதலாவது கருப்பின அரசுத்தலைவர் அதிபராவதற்குத் தேவையான 270 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றார்.


அதிபர் ஒபாமா சிக்காகோவில் தனது ஆதரவாளர்களின் முன்னிலையில் உரையாற்றுகையில், நமது நாட்டை முன்னே கொண்டு செல்வதற்கு எவ்வாறு சேர்ந்து உழைப்பது என்பதைத் தாம் மிட் ராம்னியுடன் விரைவில் பேசுவேன் எனக் குறிப்பிட்டார்.


ஒபாமாவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்த போதிலும் அவர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


ஒபாமாவின் சனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அமெரிக்க மேலவையில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்றனர். அதே வேளையில் கீழவையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையைப் பெற்றுள்ளனர்.


புளோரிடா மாநிலத்தில் 29 இடங்களில் இன்னும் முடிவுகள் வெளிவராத நிலையில், ஒபாமா 303 தேர்தல் வாக்குகளையும், ராம்னி 206 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவற்றின் மக்கள்தொகைக்கேற்ப குறிப்பிட்ட தொகையான தேர்தல் வாக்குகள் தரப்பட்டுள்ளன. குறைந்தது 270 வாக்குகள் பெற்றவர் அரசுத்தலைவராக அறிவிக்கப்படுவார்.


நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தலில், பராக் ஒபாமா கொலராடோ, ஐயோவா, பென்சில்வேனியா, மிச்சிகன், மினசோட்டா, வர்ஜீனியா, விஸ்கான்சின் போன்ற முக்கிய மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார்.


வேறும் சில முடிவுகள்: மெயின், மேரிலாந்து, வாசிங்டன் டிசி ஆகிய மாநிலங்களில் இடம்பெற்ற மக்கள் பொது வாக்கெடுப்புகளில் ஓரினத் திருமணங்களுக்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர். கலிபோர்னியாவில் மரணதண்டனையை இரத்துச் செய்ய வேண்டி இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். புவெர்ட்டோ ரிக்கோ மக்கள் தமது நாட்டை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைப்பதற்கு பெரும்பான்மையினர் வாக்களித்துள்ளனர்.


மூலம்

[தொகு]