உள்ளடக்கத்துக்குச் செல்

பாபர் மசூதி பிரச்சினை: அலகபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 9, 2011

இராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் வழிபடப்படும் ஜென்ம பூமி, பாபர் கட்டிய மசூதி என்று முஸ்லிம்களால் அழைக்கப்படும் பாபர் மசூதி வழிபாட்டிடம் ஆகியவை தொடர்பான சுமார் 60 ஆண்டு காலத்துக்கும் மேலான வழக்கில் அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.


படிமம்:Babri rearview.jpg
1992 இல் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதற்கு முன் பாபர் மசூதி

"இடத்தை பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை. இந்நிலையில், எவரும் கோராத வகையில் புதிய தீர்வினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியது ஆச்சரியமாகவும் உள்ளது." என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


அயோத்தியில் ராம ஜென்ம பூமி அமைந்துள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, நிர்மோகி அகாரா, அகில பாரத இந்து மகா சபா, ஜமாத் உல் அமாஹி ஹிந்த், சன்னி சென்ட்ரல் வஃக் போர்டு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிப்பதற்கான உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து மறு தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததோடு, அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என்றும் கூறியது.


கடந்த 1992-ம் ஆண்டு இந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் நடுப்பகுதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், இந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன. அதேபோல், சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என அலகாபாத் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தார்கள்.


1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]