உள்ளடக்கத்துக்குச் செல்

பிடெல் காஸ்ட்ரோ நான்கு ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 8, 2010

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகிய கியூபத் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.


பிடெல் காஸ்ட்ரோ

காஸ்ட்ரோவைக் கண்டதும் நாடாளுமன்றத்தில் அனைவரும் எழும்பி நின்று கைதட்டி அவரை வரவேற்றனர்.


கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் மட்டுமே அவர் உரையாற்றினார். ஈரானுடன் போர் தொடங்க வேண்டாம் என அவர் அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டார்.


கியூபாவின் அரசுத்தலைவரும் பிடெலின் சகோதரருமான ராவு காஸ்ட்ரோ பிடெலுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.


பிடெல் காஸ்ட்ரோவின் உரை மிகவும் தெளிவானதாகவும், உரத்தும் இருந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். முன்னொரு காலத்தில் பிடெலின் உரைகள் பல மணி நேரம் இடம்பெறும். அதற்கு மாறாக இம்முறை 10 நிமிடங்களே அவர் உரையாற்றியிருந்தார். தமது உரையின் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் அங்கு தங்கியிருந்து உறுப்பினர்களின் கேள்விகளைச் செவிமடுத்து அவற்றுக்கு மறுமொழி தந்தார்.


அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அணுவாயுதப் போர் நிகழும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்தார். ஈரானையும் வட கொரியாவையும் அமெரிக்கா தாக்கத்திட்டமிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். அவ்வாறு நிகழா வண்னம் அமெரிக்கா தடுக்க வேண்டும் என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்தார்.


"போர் தொடங்குமானால் தற்போதைய சமூக ஒழுங்கு மறைந்து விடும்,” என அவர் எச்சரித்தார்.


பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் பொதுவுடமைக் கட்சியின் முதல் செயலராக இருக்கிறார்.

மூலம்

[தொகு]