உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபாக்ஸ் பதவி விலகினார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 15, 2011

ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபொக்ஸ் நேற்றுத் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து பிலிப் ஹாமண்ட் புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.


லியாம் ஃபொக்ஸ்

லியாம் பொக்ஸ் தனது ஆலோசகர் ஆடம் வெரிட்டியுடன் இவர் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையால் அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் டேவிட் கேமரனுக்கு அவர் எழுதிய பதவி விலகல் கடிதத்தில் அரசாங்கத்தின் நலன்கள் எது தனது தனிப்பட்ட நலன்கள் எது என்பது தமக்குத் தெளிவற்றுப் போகத் தான் தவறுதலாக அனுமதித்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இப்பிரச்சினை குறித்து பிரித்தானிய அமைச்சரவையின் செயலாளர் சேர் கஸ் ஓ'டொன்னெல் அவர்களின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் முற்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


லியாம் ஃபொக்ஸ், அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்ற வகையிலோ அவரது நண்பர் ஆடம் வெரிட்டி எந்தப் பதவியிலும் நியமிக்கவில்லை. எனினும் வெரைட்டி தமது சொந்தத் தொடர்பு அட்டையில் லியாம் ஃபொக்சின் ஆலோசகர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். ஃபொக்சுடன் சுமார் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். சுமார் 40 அதிகாரபூர்வக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.


அமைச்சரும் அவரின் நண்பரும் பல முறை இலங்கை சென்றுள்ளனர். இந்தப் பயணங்களுக்கு யார் பணம் கொடுத்தது என்ற சர்ச்சையும் இப்போது எழுந்துள்ளது. வெரிட்டியால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு செல்வந்தர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளை அளித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. வெரைட்டியின் தனியார் பாதுகாப்பு நிறுவனம், இலங்கை மற்றும் இசுரேலின் சொத்து முதலீட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தச் சர்ச்சை குறித்து கடந்த திங்களன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய லியம் ஃபொக்ஸ், இலங்கையில் மீள் இணக்கப்பாட்டை கொண்டுவர தான் ஸ்ரீலங்கா டெவலப்மெண்ட் டிரஸ்ட் என்ற அமைப்பை 2009 ல் உருவாக்கியதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த அமைப்பு இவரின் இலங்கைப் பயணத்துக்கு பணம் அளித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என பிரித்தானிய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.


மூலம்

[தொகு]