புலிக்குட்டியைக் கடத்திச் செல்ல முற்பட்ட பெண் பாங்கொக் விமானநிலையத்தில் கைது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 27, 2010

பாங்கொக் விமானநிலையத்தில் ஈரான் செல்லவிருந்த பெண் பயணி ஒருவரின் பொதி ஒன்றினுள் இரண்டு மாத புலிக்குட்டி ஒன்று மயங்கிய நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


31 வயது தாய்லாந்தைச் சேர்ந்த இப்பெண்ணின் பொதி அளவில் பெரியதாக இருந்ததால் அவர் சிக்கலுக்குள்ளானார். எக்ஸ்-கதிர் சோதனையில் அப்பொதிக்குள் உயிருள்ள மிருகம் ஒன்றிருப்பதை விமானச் சிப்பந்திகள் கண்டுபிடித்தனர். பொதிக்குள் வேறு விளையாட்டுச் சிறுத்தைகளும் வைக்கப்பட்டிருந்தன.


இதனையடுத்து அப்பொதி திறக்கப்பட்டு புலிக்குட்டி மீட்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது.


இப்புலிக்குட்டி ஒப்போது வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்புலி காட்டு மிருக இனத்தைச் சேர்ந்ததா அல்லது வீட்டில் வளர்க்கப்பட்டதா என்பதை அறிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.


"இக்கடத்தல் முயற்சியை முறியடிக்க உதவிய அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கிறேன்,” என கடத்தல் தொடர்பான தென்கிழக்காசியப் பிராந்திய அதிகாரி கிறிஸ் ஷெப்பார்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்படியான கடத்தலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இப்பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் $1,280 தண்டமும் அறவிடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]