பென்டகனுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: இரு காவல்துறையினர் காயம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 6, 2010

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அலுவலகத்தின் நுழைவாயிலில் துப்பாக்கிதாரி ஒருவன் சரமாரியாகச் சுட்டதில் இரு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி ஏனைய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பென்டகன்

இச்சம்பவம் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 0640 மணிக்கு இடம்பெற்றது.


அந்த மனிதன் அமைதியாக மெட்ரோ நிலையம் அருகில் உள்ள பெண்டகனின் நுழைவாயிலுக்கு வந்து, திடீரென தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை உருவி பாதுகாப்புக் கடமையில் இருந்த காவல்துறையினர் மீது சரமாரியாகச் சுட ஆரம்பித்தான் என அங்கிருந்த காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். வேறு எவரும் இந்நிகழ்வில் காயமடையவில்லை. அந்தத் துப்பாக்கிதாரி 36 வயதான ஜோன் பட்ரிக் பெடல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளான். இரண்டு 9மிமீ தானியங்கித் துப்பாக்கிகளையும், பல துப்பாக்கி ரவைகளையும் வைத்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் சிறிய காயங்களுக்கே உள்ளாகினர் என பெண்டகனின் காவல்துறை உயரதிகாரி ரிச்சார்ட் கீவில் தெரிவித்தார். துப்பாக்கிதாரி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்தான்.

மூலம்