பொன்சேகாவின் விடுதியைச் சுற்றி இராணுவத்தினர் குவிப்பு
புதன், சனவரி 27, 2010
இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அவர் தங்கியுள்ள ஐந்து நட்சத்திர விடுதியைச் சுற்றி பெருமளவில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"தன்னைக் கைது செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்" என்று பிபிசி நிருபரிடம் சரத் பொன்சேகா அச்சம் தெரிவித்தார்.
என்னைக் கைது செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். | ||
—ஜெனரல் சரத் பொன்சேகா |
பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, "பொன்சேகாவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை" என்று தெரிவித்தார். ராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் பொன்சேகா அந்த ஹோட்டலில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து கொழும்பின் லேக் வீவ் ஓட்டலில் தங்கி இருக்கும் சரத் பொன்சேகாவுடன் தங்கியிருந்த இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் எனப்படும் ஒன்பது பேர் இன்று இராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சற்று நேரத்துக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், பொன்சேகா கைது செய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் அன்பரசன் தெரிவிக்கிறார். ஹோட்டலுக்கு வெளியே ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்கு பதற்றம் நிலவுவதாகவும், அவர்களைத் திரும்பப் பெற வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்ததாக அன்பரசன் கூறுகிறார்.
மூலம்
[தொகு]- "Sri Lanka president wins re-election - state TV". பிபிசி, சனவரி 27, 2010
- "Rajapaksa registers landslide win in Sri Lanka presidential poll". த இந்து, சனவரி 27, 2010
- Fonseka's officers handed over, டெய்லிமிரர், சனவரி 27, 2010
- Colombo hotel under 'siege', டெய்லிமிரர், சனவரி27, 2010