மகிந்தவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 3, 2010


இலங்கையின் அரசுத்தலைவர் பதவிக்கு இரண்டாவது தடவையாகத் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலம் 2010 நவம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாவதாக இலங்கையின் உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.


தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மிஞ்சி இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி ராஜபக்ச தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கமைய கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே மீண்டும் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார்.


எனினும் கடந்த 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்த நாட்டு மக்கள் அவரை 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருந்ததைச் சுட்டிக்காட்டி சில சட்ட வல்லுனர்கள் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அவரது பதவிக்காலம் அடுத்த வருடம் அதாவது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே ஆரம்பமாகின்றது என வாதிட்டு வந்தார்கள்.


இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதியாக தான் எப்போது பதவி ஏற்க வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆலோசனை கேட்டிருந்தார். இதனையடுத்து, நாட்டின் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா அவர்களின் தலைமையில் ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் கூடி ஆராய்ந்ததன் பின்னர் தமது முடிவை ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்திருந்தார்கள்.


இதனடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது இரண்டாவது பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே ஆரம்பமாகின்றது என ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்திருக்கின்றார்.


கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தெர்தலில் முதல் தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்கள், அந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்