உள்ளடக்கத்துக்குச் செல்

போராளிகளின் முன்னேற்றத்தைத் தடுத்துள்ளதாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

சனி, மார்ச்சு 23, 2013

தலைநகர் பாங்குயியை நோக்கிய போராளிகளின் முன்னேற்றத்தைத் தாம் தடுத்து நிறுத்தியுள்ளதாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுப் படையினர் அறிவித்துள்ளனர்.


தலைநகரில் இருந்து 75 கிமீ வடக்கே தடுப்புச் சாவடி முகாம் ஒன்றைத்தாண்டி நகரை நோக்கி முன்னேறிய செலெக்கா போராளிகளின் வாகன அணி மீது தமது உலங்கு வானூர்தி, தாக்குதல் நடத்தியதாக படையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 2,000 போராளிகள் வரை தடுப்புச் சாவடியைத் தாண்டி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தலைநகர் பாங்குயியில் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மற்றும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த சனவரி மாதத்தில் செலெக்காப் போராளிகளுடன் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே செய்துகொண்ட உடன்பாட்டை பொசீசே மீறிவிட்டதாக செலெக்கா போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இக்குற்றச்சாட்டை பொசீசே மறுத்து வருகிறார். பிராந்திய அரசுகளின் முன்னிலையில் காபொன் நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் இந்த உடன்பாடு 2013 சனவரியில் எட்டப்பட்டிருந்தது. தலைநகர் பாங்குயியில் சுமார் 400 தென்னாப்பிரிக்கப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.


1960 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்த மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, பல முறை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் உள்ளானது. இதன் மூலம் அயல் நாடான சாட் பல முறை இந்நாட்டின் அரசியலில் நேரடியாகத் தலையிட வேண்டி வந்தது. 2003 ஆம் ஆண்டில் பொசீசே, இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சாட் நாடு பல வழிகளில் உதவியது. பின்னர் 2005, 2011 தேர்தல்களில் அவரே வெற்றியீட்டினார்.


ஆப்பிரிக்காவின் வறிய நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தங்கம் மற்றும் வைரம் போன்ற கனிமப்பொருட்கள் மிகுந்த நாடாகும்.


மூலம்[தொகு]