உள்ளடக்கத்துக்குச் செல்

போர்க்குற்றங்களுக்காக வங்கதேச இசுலாமியத் தலைவர் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 13, 2013

1971 ஆம் ஆண்டில் பாக்கித்தானுடனான விடுதலைப் போரின் போது குற்றங்கள் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச இசுலாமியத் தலைவர் அப்துல் காதர் முல்லா நேற்றுத் தூக்கிலிடப்பட்டார். இவர் ஜமாத்-இ-இசுலாமி கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.


வங்காளதேசத்தின் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதலாவது நபர் இவர் ஆவார். 1971 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக இத்தீர்ப்பாயம் 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.


இவர் "மிர்ப்பூரின் கசாப்புக்காரர்" என பன்னாட்டுத் தீர்ப்பாயத்தினால் வர்ணிக்கப்பட்டவர். டாக்காவின் மிர்ப்பூர் புறநகரில் பாக்கித்தானில் இருந்து விடுதலையை ஆதரித்த அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் கல்விமான்களைப் படுகொலை செய்தமை, மற்றும் பல போர்க்குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தே வந்துள்ளார்.


65 வயதான அப்துல் காதர் முல்லாவின் மரணதண்டனை நேற்று பிற்பகல் டாக்கா மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது. இவரது மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜமாத்-இ-இசுலாமியா கட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கைகலப்புகளில் மூவர் உயிரிழந்தனர்.


ஆளும் அவாமி லீக் தலைமையிலான வங்க அரசு இந்த சிறப்பு நீதிமன்றத்தை 2010 மார்ச் மாதத்தில் அமைத்தது. கிழக்கு பாக்கித்தானாக இருந்து 1971ஆம் ஆண்டில் தனி நாடாக வங்கதேசம் பிரிந்து சென்றபோது நடத்தப்பட்ட விடுதலைப் போரின் போது பாக்கித்தானுடன் தொடர்பு வைத்திருந்த வங்காள தேசத்தவர்கள் மீது இந்தச் சிறப்பு நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்தது. இப்போரின் போது கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்றங்கள் பெரிய அளவில் நடந்திருந்தன. அப்போதைய மேற்குப் பாக்கித்தானின் இராணுவத்தினர் பெருமளவு வங்கதேசப் பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடிக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.


ஜமாத்-இ-இசுலாமி கட்சியின் மேலும் நான்கு தலைவர்களும் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ளார்கள்.


மூலம்

[தொகு]