மட்டக்களப்பில் 'ராவணன்' படம் திரையிடப்படவிருந்த திரையரங்கு தீ வைக்கப்பட்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, சூன் 19, 2010

இலங்கையின் கிழக்கு மாகாணத் தலைநகர் மட்டக்களப்பில் கல்லடியில் ராவணன் என்ற தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படம் திரையிடப்படவிருந்த அரங்கத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவு அன்று தீ வைக்கப்பட்டது.


வியாழக்கிழமை அன்று "தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம்" என்ற தலைப்பில் "சுதந்திர இலங்கையின் தமிழர்கள்" என்ற குறிப்பிடப்பட்டு சிங்களத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்று மட்டக்களப்பில் உள்ள திரையரங்குகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது.


அந்தத் துண்டுபிரசுரத்தில் "அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஐஃபா என்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடைபெற விடாது தடுத்து இலங்கை ஜனாதிபதியையும் இலங்கை அரசையும் அவமானப்படுத்த முனைந்த தென்னிந்திய தமிழ் சினிமா சமூகத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், இந்திய சினிமா வியாபாரம் இலங்கையிலும் தங்கியுள்ளது என்பதை காண்பிக்கவும் 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கில் தென்னிந்திய சினிமா எதிர்ப்பு வாரமாக பிரகடனம் செய்து 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கு சினிமா அரங்குகளில் இந்திய தமிழ் படங்களை திரையிடுவதை தவிர்த்து எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு படமாளிகையினரையும் ரசிகர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்நிலையில் மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் மணிரத்தினத்தின் "ராவணன்" என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் நேற்று வெள்ளிக்கிழமை திரையிடப்படவிருந்தது.


இதை தடுக்கும் முகமாகவே திரையரங்கிற்குள் கடந்த நள்ளிரவு புகுந்த சிலர் திரையரங்கின் திரைக்கு தீவைத்துள்ளனர். இதனால் திரை முற்றாக எரிந்துள்ளது.

மூலம்

Bookmark-new.svg