உள்ளடக்கத்துக்குச் செல்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தி, விபுலாநந்தர் சிலைகள் உடைக்கப்பட்டன

Checked
விக்கிசெய்தி இலிருந்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

வெள்ளி, ஏப்பிரல் 6, 2012

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர், மகாத்மா காந்தி, பேடன் பவல், மற்றும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் சிலைகள் வியாழன் நள்ளிரவில் இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டதை அடுத்து நகர மக்கள் மத்தியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. குறித்த பகுதியில் காவல்துறை மற்றும் படையினரும் குவிக்கப்பட்டனர்.


மட்டக்களப்பு நகரில் நகரின் மத்தியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் சாரணியத் தந்தை பேடன் பவல் ஆகியோரின் சிலைகளின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதே நாள் ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலை முன்றலில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர் சிலை மற்றும் கல்வி அலுவலகச சந்தியில் அமைந்திருந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் சிலைகளின் தலைகளும் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நகரில் அமைந்துள்ள காந்தி சிலை 60 ஆண்டுகள் பழமையானதாகும். பேடன் பவலின் நூற்றாண்டு விழாவின் நிகழ்வுகள் தம்புள்ளையில் இடம்பெற்று வருகையில் அதுவும் உடைக்கப்பட்டுள்ளது. சிலைகள் உடைக்கப்பட்டமை மட்டக்களப்பு மாவட்ட வாழ் தமிழ் மக்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.


மட்டக்களப்பு நகர மத்தியில் வாவிக்கரை ஓரமாக மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்த இடம் மகாத்மா காந்தி சதுக்கம் என்றும் அழைக்கப்படுவதும், இங்கு அகிம்சைப் போராட்டங்கள் இந்த இடத்தில் நடத்தப்படுவதும் வழக்கம். மட்டக்களப்பு ஆனைப்பந்தி மகாவித்தியாலயத்தில், அக் கல்வியகத்தை தோற்றுவித்த சுவாமி விபுலானந்தரைக் கௌரவிக்கும் வகையில் அவரது சிலை நிறுவப்பட்டிருந்தது. அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உழைத்த கல்விமான் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை. மட்டக்களப்பு கல்வித் திணைக்களத்திற்கு முன் அவரது சிலை அமைக்கப்பட்டிருந்தது. சாரணிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உலகெங்கும் சாரணியர் என்ற அமைப்பினைத் தோற்றுவித்த பேடன் பவல் சிலை அமைக்கப்பட்டிருந்தது.


மூன்று மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகப்பிரிவில் காத்தான்குடி – ஆரையம்பதி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டது. திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையின் தலைப்பகுதி சில மாதங்களுக்கு முன்னர் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தது.


மூலம்

[தொகு]