மருத்துவர் பட்டேல் பிணையில் விடுதலை, மீள்விசாரணைக்கு ஆத்திரேலிய நீதிமன்றம் உத்தரவு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 26, 2012

2010 ஆம் ஆண்டில் நோக்கமில்லாக் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜயந்த் பட்டேல் மீது மீள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆத்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரைப் பிணையில் விடுவித்தது.


மரு. பட்டேல் மீது நடத்தப்பட்ட விசாரணைகளில் நீதி தவறியுள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


இந்தியாவில் குஜராத்தில் பிறந்து அங்கேயே பயிற்சி பெற்ற அமெரிக்க குடியுரிமை பெற்ற மரு. பட்டேல் (62) 2003 - 2005 காலப்பகுதியில் ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பண்டபர்க் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். ஆஸ்திரேலிய ஊடகங்களினால் "Dr Death" என வருணிக்கப்படும் இவர் மூன்று கொலைகள், மற்றும் ஒருவருக்கு உடல் ரீதியாகத் தீங்கு விளைவித்தமை போன்ற குற்றங்களுக்காக 2010 சூலை மாதத்தில் இவரை பிறிஸ்பேன் உச்சநீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருந்தது.


58 நாட்கள் நடைபெற்ற இவரது வழக்கின் 43 ஆம் நாள் வழக்குத் தொடுநர்கள் "வழக்கில் அடிப்படையான மாற்றம் ஒன்றைக்" கொண்டுவந்ததாகத் தெரிவித்துள்ள நீதிமன்றம், இதனை நீதிதவறியமையாக அறிவித்திருக்கிறது. வழக்கு விசாரணைகளின் போது மரு. பட்டேல் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகள் அனைத்தும் மருத்துவத் தர நிர்ணயத்திற்கமையவே நிறைவேற்றப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. ஆனாலும், அதனைக் கருத்தில் கொள்ளாது, அவர் தனது சிகிச்சைகளில் கவனக்குறைவாகச் செயல்பட்டார் என்ற ரீதியிலேயே வழக்கு பின்னர் கொண்டு செல்லப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இவர் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]


மூலம்[தொகு]