உள்ளடக்கத்துக்குச் செல்

மலாலாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சாகரோவ் மனித உரிமை விருது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 10, 2013

பாக்கித்தானியப் பள்ளி மாணவியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான மலாலா யூசப்சையிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சாகரோவ் மனித உரிமை விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் பாக்கித்தானியத் தாலிபான் போராளிகளால் தலையில் சுடப்பட்டவர் ஆவார்.


சுதந்திரப் பேச்சுக்காக சகாரொவ் பரிசு ஐரோப்பிய நாடாளுமன்றத்தினால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு 50,000 யூரோக்கள் ஆகும். இப்பரிசு சோவியத் இயற்பியலாளரும், சோவியத் அதிருப்தியாளருமான அந்திரேய் சாகரோவ் என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது.


16-வயது மலாலா பெண் பிள்ளைகளுக்கு அதிக உரிமைகள் கோரியதால் சென்ற ஆண்டு சுடப்பட்டார். பாக்கித்தானின் சுவாட் பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் வசித்து வந்தார். தாலிபான்கள் பெண்களுக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதித்ததை அடுத்து மலாலா பெண்களுக்கு அதிக உரிமை கேட்டுப் போராடி வந்தார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்று வந்தார். 2009 ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று புனைப் பெயரில் எழுதி வந்தார். பின்னர் தொலைக்காட்சி நேர்முகம் ஒன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து இவர் பரவலாக அறியப்பட்டார். தனது நண்பர்களுடன் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் போது இவர் தலையில் சுடப்பட்டார்.


மலாலா அண்மையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். தற்போது இவர் புலம் பெயர்ந்து இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வாழ்ந்து வருகிறார்.


சாகரோவ் பரிசு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, பர்மாவின் ஆங் சான் சூச்சி அம்மையார் போன்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்வாண்டுப் பரிசுக்கு அமெரிக்க இரகசியங்களைக் கசியவிட்ட எட்வர்ட் சினோடன், மற்றும் மூன்று பெலருசியர்கள் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.


மூலம்

[தொகு]