உள்ளடக்கத்துக்குச் செல்

மாலியின் வடக்கு நகர் ஒன்றை படையினர் போராளிகளிடம் இருந்து கைப்பற்றினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 25, 2013

மாலி மற்றும் பிரெஞ்சுக் கூட்டுப் படையினர் அந்நாட்டின் வடக்கே ஒம்போரி என்ற நகரை இசுலாமியப் போராளிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இசுலாமியப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாலியின் வடக்குப் பகுதியின் முக்கிய நகரான காவோ நகரில் இருந்து 160 கிமீ தூரத்தில் உள்ளது ஒம்போரி நகரம். முன்னதாக காவோ நகருக்கு அருகில் உள்ள போராளிகளின் தளங்கள் மீது பிரெஞ்சு விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கின.


அதே வேளையில், கிழக்கே நைஜர் நாட்டை இணைக்கும் பாலம் ஒன்றை போராளிகள் தகர்த்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பாலத்தினூடாகவே ஆப்பிரிக்கப் படையினர் தமது தளம் ஒன்றை அமைக்க எண்ணியிருந்தனர். ஆனாலும், தீவிரவாதிகளின் பகுதிக்குள் நுழையத் தமக்கு வேறு வழிகள் உள்ளன என மாலி அரசு தெரிவித்துள்ளது.


பல ஆப்பிரிக்க நாடுகள் மாலிக்கு இராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. மாலியில் நிலை கொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளுக்கு உதவத் தமது உளவு விமானம் ஒன்றை அனுப்ப பிரித்தானியா முன்வந்துள்ளது. இத்தகைய விமானங்கள் லிபியாவில் 2011 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன.


கடந்த ஆண்டு இசுலாமியத் தீவிரவாதிகளும், துவாரெக் போராளிகளும் மாலியின் வடக்குப் பகுதியின் பெரும்பாலான பிரதேசங்களைக் கைப்பற்றியிருந்தனர். இவர்களை அங்கிருந்து விரட்ட பிரான்சு இம்மாதம் சனவரி 11 இல் தமது படையினரை அங்கு அனுப்பினர்.


மூலம்

[தொகு]