மாவீரர் நாள் 2013: யாழ்ப்பாணம் உட்பட உலகெங்கும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு
- 17 பெப்ரவரி 2025: இலங்கைத் தமிழர் பிரச்சினை: இந்தியப் பிரதமரிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு
வியாழன், நவம்பர் 28, 2013
தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் உட்பட உலகெங்கணும் உள்ள தமிழர்கள் நேற்று மாவீரர் நாள் அன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இராணுவத்தினரின் தடைகளுக்கு மத்தியில், நேற்று மாலை 6.01 மணிக்கு யாழ்ப்பாண மருத்துவமனையில் உள்ள நவீன சத்திரசிகிச்சைக் கட்டிடத்தின் மேல்தளத்தில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்கள் பலர் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நேற்று இராணுவத்தினர் கடுமையான சோதனைப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். இரண்டு நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என இலங்கைக் காவல்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், வடமாராட்சியில் "மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினீர்களா," எனக் கேட்டு இளைஞர்கள் சிலர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர்.
மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், அச்சுறுத்தல்களைத் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் நினைவு கூரப்பட்டது. திருநெல்வேலி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மாவீரர் நாளை ஒட்டி நேற்று வடமாகாண கல்வியமைச்சின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற மரம் நடுகை நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராசா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் வே. சிவயோகன், வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட், வடமாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோர் மரங்களை நாட்டி வைத்தனர். முன்னதாக யாழநகரில் தந்தை செல்வா தூபிப் பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மரநடுகையினை மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் அறிவித்திருந்தார். எனினும் அவரிற்கு வீடு தேடி சென்ற இலங்கைப்படையினர் பகிரங்கமாகவே கொலை அச்சுறுத்தல்களை விடுத்ததையடுத்து அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திட்டம் மாற்றஞ் செய்யப்பட்டு கல்வியங்காடு ஆடியபாதம் வீதியினிலுள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவின் அலுவலக வளவில் மர நடுகை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஈகைச்சுடரேற்றி மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வுகள் எக்சல் மண்டபத்தில் நடந்தது. பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம் என்னும்ஈதனை ஒழுங்கு செய்திருந்தது. நண்பகலில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர்.
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார். பொதுச் சுடரினை தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார்.
மூலம்
[தொகு]- யாழில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு - பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு, தமிழ்வின், நவம்பர் 27, 2013
- அகதிகள் சிறப்பு முகாமில் 36 பேர் உண்ணாவிரதம், தினமணி, நவம்பர் 27, 2013
- தடைகளை மீறி யாழில் மரம் நாட்டினார்கள் சி.வியும் ஐங்கரநேசனும், குளோபல்தமிழ், நவம்பர் 27, 2013
- லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள், தமிழ்வின், நவம்பர் 27, 2013
- சுவிட்சலாந்து நாட்டின் எழுச்சியுடன் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம், தமிழ்வின், நவம்பர் 27, 2013