மும்பையில் கப்பல் விபத்தினால் கடலில் எண்ணெய்க் கசிவு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 10, 2010

மும்பைக்கு அருகில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்திற்குள்ளானதால் கடலில் சுமார் 50 தொன் அளவினால எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் கடலோர காவல் படையைச் சேர்ந்த 6 கப்பல்களும், உலங்கு வானூர்தியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


மும்பை துறைமுகத்தில் இருந்து, 5 கடல் மைல் தொலைவில் காலிஜியா 3, எம்எஸ்சி சித்ரா என்ற இரு சரக்குக் கப்பல்கள் சனிக்கிழமை மோதின. இதில், சித்ரா கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது. மூன்றாவது நாளாக எண்ணெய் கசிவு மேலும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் மூழ்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் எண்ணெய் கசிவை அகற்றும் பணி தாமதமாகி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக எண்ணெய் கசிவு கடற்கரை வரை பரவி வருகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுள்ளார்.


பாபா அணு ஆய்வு மையத்தில் உள்ள துருவா, சிரஸ் ஆகிய அணு உலைகளை குளிரூட்டுவதற்காக கடல் நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடலில் எண்ணெய் கலந்ததை அடுத்த அணு உலைகளை குளிரூட்ட கடல் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மூலம்[தொகு]