2008 மும்பை தாக்குதல்: குற்றவாளி கசாப் தூக்கிலிடப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 21, 2012

2008 மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு நபரான முகமது அஜ்மல் அமீர் கசாப் என்பவர் இன்று புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார். இந்த நிகழ்வு காரணமாக சிறைச்சாலையைச் சுற்றி வழமைக்கு மாறாகக் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


பாக்கித்தானியரான கசாப் (வயது 25) தனக்குக் கருணை காட்டுமாறு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தும், அவரது கோரிக்கை இம்மாதம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 0730 மணிக்கு புனே சிறைச்சாலையில் இவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்திய உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. தூக்குத்தண்டனை நிறைவேறியது குறித்து கசாப்பின் உறவினர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆயினும் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நேரம் இடம் என்பன மிகுந்த இரகசியமாகப் பேணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2008 நவம்பர் 26 ஆரம்பமான 60-மணிநேர மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தொடருந்து நிலையம், ஆடம்பர விடுதிகள், மற்றும் யூதக் கலாசார நிலையம் ஆகியவற்றில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


2010 மே மாதத்தில் கசாப் குற்றவாளியாகக் காணப்பட்டு ஆகத்து மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.


தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது அறிவிக்கப்பட்டதும் புனேயின் யெரவாதா சிறைக்கு முன்னால் மக்கள் கூடி ஆரவாரித்தனர். பலர் தேசப்பற்றுப் பாடல்களைப் பாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


இதேவேளை கசாப்பின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை பற்றிய செய்தி பாக்கிஸ்தான் அரசிற்கு அறிவிக்கப்பட்டதாக மகாராஸ்டிராவின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டில் அறிவித்துள்ளார். அத்துடன் கசாப் மரணத்திற்கு முன்னர் எந்தவொரு இறுதி ஆசையையும் வெளிப்படுத்தவில்லை என்று பட்டில் தெரிவித்தார்.


பாக்கித்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கார்-இ-தாயிபா இயக்கம் "கசாப் ஒரு மாவீரன்" என அறிவித்துள்ளது. பாக்கித்தான் தாலிபான் இயக்கம் தூக்குத்தண்டனை நிறைவேற்றம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளது.


இந்தியாவில் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதற்தடவையாகும். கல்கத்தாவில் பள்ளிச்சிறுமி ஒருவரை பாலியல் வன்முறைக்குட்படுத்திப் படுகொலை செய்த குற்றத்திற்காக 2004 ஆம் ஆண்டில் ஒருவர் தூக்கிலிடப்பட்டார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]