உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள எல்லையை நோக்கி மக்கள் பேரணி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 12, 2011

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், முல்லைப் பெரியாறு அணையை மீட்போம்’ என்ற கோஷத்துடன் காவல் துறையின் தடையை மீறி கேரள எல்லையை நோக்கிப் பேரணி நடத்தினர். நேற்று முன்தினமும், நேற்றும் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்ததால் எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.


முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இக் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.


இந்த நிலையில் முன்தினமும் நேற்றும் யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றாலும் கூட குமுளி வரை மக்கள் முன்னேறினர். பின்னர் மாவட்ட ஆட்சியhளரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.


இதற்கிடையே,எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கேரள எல்லை அருகே சென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பொதுமக்கள் உறுதியளித்தனர். தமிழகத்தில் கேரளாவை சேர்ந்த நிறுவனங்கள் ஆங்காங்கே தாக்கப்படுகின்றன. பொது மக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மூலம்

[தொகு]