உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்சிக்கோ வளைகுடா எண்ணெய்க் கசிவு அமெரிக்கக் கரையை அடைந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 2, 2010

மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் கடந்த வாரம் எண்ணெய்த் துரப்பன மேடை கடலில் மூழ்கி வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு லுயிசியானா மாநிலக் கடலோரப் பகுதிகளில் பரவியுள்ளது. ஒரு நாளைக்கு 5,000 பீப்பாய் எண்ணெய்க் கசிவு 50 மைல் தொலைவு வரையில் கடலில் பரவுவதாக அமெரிக்க உயர் அதிகாரி அட்மிரல் மேரி லாண்ட்ரி கூறினார்.


ஏப்ரல் 27, 2010 முதல் மே 1, 2010 வரை எண்ணெய்க் கசிவின் அமைவு

எண்ணெய்க் கசிவை அகற்ற மத்திய அரசாங்கத்தின் உதவியை லூயிசியானா மாநில ஆளுநர் பாபி ஜின்டால் நாடியுள்ளார். சுற்றுப்புற தூய்மைக்கேட்டிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே தங்கள் முதல் பணி என்று அவர் கூறியுள்ளார்.


இந்த எண்ணெய்க் கசிவின் காரணத்தைக் கண்டுபிடிக்கும் வரையில் அமெரிக்காவில் எண்ணெய் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா பணித்துள்ளார்.


தற்போது ஒதுங்கிவருவதைவிட மேலும் அடர்த்தியான எண்ணெய்த் திட்டு கரையோரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.


குழாய் உடைப்பிலிருந்து ஒரு நாளைக்கு ஐயாரம் பீப்பாய்கள் என்ற அளவில் தொடர்ந்து எண்ணெய் கடலில் கசிந்துவருகிறது என்பதும் அந்தக் கசிவைத் தடுத்து நிறுத்துவது என்பது பெரும் சிரமம் என்றும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.


எண்ணெய்க் கசிவு ஏற்படும் இடத்தை அடைத்து கசிவை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்கு நாற்பத்து ஐந்து முதல் தொண்ணூறு நாட்கள் வரை ஆகலாம் என்று இந்த எண்ணெய் தொண்டியெடுக்கும் மேடையை குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூறுகிறது.


மெக்சிக்கோ வளைகுடாப் பகுதிக் கரையோரம் என்பது சுற்றுச்சூழல் ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒரு இடமாகும். மீன்வளம் மிக்க இந்தப் பகுதி, அமெரிக்காவின் கடலுணவு வழங்கும் முக்கிய பிரதேசமாகவும் விளங்குகிறது. எண்ணெய் திட்டால் கரையோரப் பகுதியில் பாதிப்பு ஏற்படுமானால், மீன்பிடித் தொழில்துறையும் கணிசமாகப் பாதிக்கப்படும்.


மூலம்

[தொகு]