மெக்சிக்கோ வளைகுடா எண்ணெய்க் கசிவைத் தடுக்கும் முயற்சி தோல்வி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 30, 2010

மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவைத் தடுத்து நிறுத்துவதற்கு பிரித்தானியப் பெட்ரோலியம் (BP) என்ற பன்னாட்டு எண்ணெய் நிறுவனம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


"top kill" என அழைக்கப்பட்ட அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து எண்ணெய்க் கசிவைத் தடுக்க இனிமேல் புதிய வழிமுறைகளை இந்நிறுவனம் மேற்கொள்ளவிருப்பதாக BP நிறுவனத்தின் தலைமை அதிகாரி டக் சட்டில்ஸ் தெரிவித்தார்.


இது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில், "தொடர்ந்து கசிந்து வரும் எண்ணெய் கோபமூட்டுகிறது" எனத் தெரிவித்தார்.


BP எனப்படுவது எண்ணெய் அகழ்வில் ஈடுபடும் முன்னணி பிரித்தானிய நிறுவனங்களுள் ஒன்று. அது உலகப் பெருங்க்கடல்களின் பல இடங்களில் இயந்திர மேடைகளை அமைத்து ஆழ்துளை இயந்திரங்களின் மூலம் எண்ணெய் அகழ்வை மேற்கொள்கிறது. இந்நிலையில் மெக்சிக்கோ வளைகுடாவில், கரையிலிருந்து 48 மைல் தூரத்தில் இருக்கும் அந்நிறுவனத்தின் ஆழ்துளை இயந்திரம் ஒன்று கடந்த ஏப்ரல் 20 ஆம் நாள் வெடித்தது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.


ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றிலேயே இவ்வெண்ணெய்க் கசிவு மிகவும் பெரியதாகக் கருதப்படுகிறது.


சென்ற புதன்கிழமையில் இருந்து 30,000 பரல்கள் மணல் எண்ணெய்க் கிணற்றினுள் போடப்பட்டது, ஆனாலும் இம்முயற்சி பலனளிக்கவில்லை. இதற்கு இதுவரையில் 645 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவேற்பட்டுள்ளடாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இனிமேல் குழாயில் கசிவு ஏற்பட்ட இடத்தை வெட்டி அதனை மூடுவதற்கு முயற்சி எடுக்கப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கைக்குக் கிட்டத்தட்ட 4 நாட்கள் பிடிக்கலாம் என டக் சட்டில்ஸ் தெரிவித்தார்.


இந்த முயற்சி, இத்தனை ஆழத்தில் இருப்பதால் ஒரு சோதனையாகத்தான் இருக்கும் என்று எச்சரித்துள்ளதுடன் அது சரியாக வேலை செய்யுமா என்பது தெரிவதற்குப் பல நாட்கள் பிடிக்கும் என்றும் பெற்றோலிய நிறுவனம் கூறியுள்ளது.


குறைந்தது 12,000 பரல்கள் (504,000 கலன்) எண்ணெய் தினமும் கசிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்[தொகு]