மேர்வின் சில்வா குற்றமற்றவர் என சுதந்திரக் கட்சி ஒழுக்காற்றுக் குழு தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டம்பர் 1, 2010

இலங்கையில் கடந்த மாதம் பிரதேச சபை ஊழியர் ஒருவரை முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிய நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்திய ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு மேர்வின் சில்வா குற்றமற்றவர் என்று தீர்மானித்துள்ளது.


டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கத் தவறியமைக்காக அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவத்திற்கு மேர்வின் சில்வா பொறுப்பு என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதுவும் அவருக்கு எதிராக இல்லை என்று மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு கூறியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பிரதியமைச்சர் பதவியில் இருந்தும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.


கிராமத்தில் பாரம்பரியமாக வழங்கப்படும் தண்டனை தொடர்பாக உதாரணம் காட்டும் விதத்தில் தன்னைத்தானே மரத்தில் கட்டிவைக்க விரும்பியிருந்ததாக அந்த அதிகாரி கூறியிருந்ததாக ஒழுக்காறுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


தமது கடமையிலிருந்தும் ஏனையவர்கள் தவறி விடக்கூடாது என்பதை வெளிப்படுத்த இவ்வாறு செய்து காண்பித்ததாக அந்த அதிகாரி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தன்னிச்சையாகவே அவர் மரத்தில் தன்னை கட்டியிருந்ததாக குழுவானது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.


கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றம் எதனையும் மேர்வின் சில்வா இழைத்திருக்கவில்லை என்று குழுவானது தீர்மானித்திருப்பதாக சுகாதார அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேர்வின் சில்வா மீண்டும் களனிப் பகுதியின் கட்சி ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார். இவரின் அமைச்சர் பதவி குறித்து அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச விரைவில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புள்ள செய்தி[தொகு]

மூலம்[தொகு]