மேற்குவங்கத்தில் சிபிஐ(எம்) தலைவர் திலிப் சர்க்கார் சுட்டுக்கொலை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 10, 2013

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திலிப் சர்க்கார் ஞாயிறன்று காலை மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.


65 வயதான திலீப் சர்க்கார் நேற்று ஞாயிறன்று அசன்சால்-ராணி கஞ்ச் தொழிலகப் பகுதியில் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பர்துவான் மாவட்டத்தின் பாரபாணி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றியவர் திலீப் சர்க்கார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களும், பொது மக்களும் ஆவேசத்துடன் கண்டனப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். திலீப் சர்க்கார் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.


மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் பர்துவான் மாவட்டத்தில் நடந்துள்ள மூன்றாவது படுகொலை சம்பவம் இது ஆகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இதேபோல காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது குறிவைத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக்கொடிய குற்றச் செயல் குறித்து முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது‍.


மூலம்[தொகு]