மேற்கு வங்கத்தில் தொடருந்து மோதியதில் ஏழு யானைகள் கொல்லப்பட்டன

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், செப்டம்பர் 23, 2010

Jalpaiguri, West Bengal: மேற்கு வங்கத்தில் ஜெய்ப்பால்குரி மாவட்டத்தில் பினாகுரி நகருக்கு அருகே தொடருந்துப் பாதை ஒன்றைக் கடக்க முயல்கையில் வேகமாக வந்த சரக்கு வண்டி ஒன்று மோதியதில் ஏழு யானைகள் கொல்லப்பட்டன. மேலும் ஒரு யானை காயமடைந்தது.


நேற்று புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐந்து யானைகள் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் இரண்டு யானைகள் படுகாயமடைந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக வட்டார வனத்துறை அதிகாரி சுனித்தா கட்டக் தெரிவித்தார்.


யானைகளின் கூட்டம் ஒன்று மொராகட் காட்டில் இருந்து டயானா காட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது இரண்டு குட்டி யானைகள் வழியில் இருந்த தொடருந்துக் கடவையில் சிக்கிக்கொண்டதாகவும், அவற்றைக் காப்பாற்ற சில யானைகள் முயற்சித்ததாகவும் அதன் போதே தொடருந்து மோதியதாகவும் அவர் தெரிவித்தார்.


இறந்த மற்றும் காயமடைந்த யானைகளைச் சுற்றி ஏனைய யானைகள் காவல் இருந்ததால் அப்பகுதியில் தொடருந்துச் சேவைகள் அனைத்து இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


வேகமாகச் செல்லும் தொடருந்துகள் இவ்விடத்தில் யானைகளை மோதுவது வழக்கம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று மாதங்களுக்கு முன்னரும் ஒரு யானை இவ்வாறு இறந்துள்ளது.


இவ்விடத்தில் 25 முதல் 40 கிமீ/மணி வேகத்திலேயே தொடருந்துகள் செல்ல அநுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்தக் குறிப்பிட்ட வண்டி 70 கிமீ.மனி வேகத்தில் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்[தொகு]

Bookmark-new.svg