யப்பானின் புதிய பிரதமராக யோசிகிக்கோ நோடா பதவியேற்றார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 30, 2011

யப்பானின் புதிய பிரதமராக யோசிகிக்கோ நோடா இன்று நாடாளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் யப்பானின் நிதியமைச்சராக இருந்தவர்.


யோசிகிக்கோ நோடா

நேற்று ஆளும் சனநாயகக் கட்சியின் கூட்டத்தில் 54 வயதான நோடோ கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து இன்று கூடிய நாடாளுமன்றம் அவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது.


யப்பானில் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி, புக்குஷிமா அணுமின் நிலையக் கதிர்வீச்சு ஆகிய பேரிடர்களை, அப்போதைய பிரதமர் நவோட்டோ கான் சரியாகக் கையாளவில்லை என, மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தமையினால் கான் கடந்த, 26ம் தேதி வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து ஆளும், யப்பான் சனநாயகக் கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர் நோடா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்ஜி மகேரா, வர்த்தகத்துறை அமைச்சர் பான்ரி காயேடா உள்ளிட்ட ஐந்து பேர், பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டனர். தேர்தலில் நோடா 215 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.


யப்பானில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் மாறியுள்ளனர். இப்போது ஆறாவது பிரதமராக நோடா பொறுப்பை ஏற்கிறார். . வெற்றிக்குப் பின் பேசிய நோடா, கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.


மூலம்[தொகு]